வாழைப்பூவின் அற்புத மருத்துவ குணங்கள்...!!!

வாழைப்பூவின் அற்புத மருத்துவ குணங்கள்...!!

              வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து உடலுக்கு நன்மையளிக்கும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க கூடியது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

            மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்  சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
                     

    பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

     வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

        கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

       வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

       வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

       இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

      வயிற்றுப் புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.

      மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

        பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.

Comments