வாய்ப் புண் உள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்து மணத்தக்காளி கீரை.!!


                          மணத்தக்காளி கீரை;



          மணத்தக்காளி கீரை சுக்குட்டி கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடியின் கீரை, தண்டு, காய் ஆகிய அனைத்தும் சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த கீரையின் விஞ்ஞான பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். மணத்தக்காளி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

         வாய்ப் புண் உள்ளவர்களுக்கு மிக சிறந்த மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். மேடை பேச்சாளர்களும், பாடகர்களும், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைக் கட்டிக் கொள்ளும் என்ற பிரச்சனை வராது. உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது.நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும் தன்மை கொண்டது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தனியும்.

           மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த கீரை சிறுநீர்க் கோளாறுகளை சரிசெய்வதுடன், சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். காசநோயாளிகள் மணத்தக்காளி கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

         மணத்தக்காளி கீரையின் பழம் புதுமணத்தம்பதிகள் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர்.

           தோலில் ஏற்படும் அலர்ஜி, வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த மணத்தக்காளி கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தடவலாம். மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடலின் அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.

          இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் சாப்பிட்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும். இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும், மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும்.

வயிற்று புண்கள்;

           காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

           ஜுரம் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.

          கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர இந்த நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும்.

Comments